Sunday 21 January 2018

மாணவர்கள் உயிரை குடிக்கும் தண்டனைகள் தேவையா?


மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் மதிப்பு கொடுக்க வேண்டிய வரிசையில் பெற்ற தாய், தந்தைக்கு அடுத்து நண்பனையோ, வேறு உறவுகளையோ வைக்காமல் கல்வி கற்று தரும் ஆசிரியரை வைத்திருப்பதில் இருந்து அந்த பணியின் மதிப்பை நாம் புரிந்து கொள்ளலாம். சென்ற வாரத்தில் ஒரு பள்ளியில் தாமதமாய் வந்த மாணவர்களை விளையாட்டு மைதானத்தை சுற்றி வாத்து நடை போட சொல்ல அதில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கவும் வேண்டும் அதே சமயம் அவர்களை தண்டிக்கும் போது அவர்கள் உடலுக்கோ, உயிருக்கோ எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது. தண்டனை கொடுப்பது என்பதே அந்த தவறை மீண்டும் செய்யாமல் தவறை திருத்தி கொள்வதற்காக தான், தண்டனை கொடுத்து அதன் மூலம் மாணவர்கள் உயிரை பறித்து விட கூடாது. 


இதற்கு முன்பு, இது போன்று நம் நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தவறு செய்யும் மாணவனை தண்டிப்பதற்கு அந்த மாணவனை/மாணவியை  சக மாணவர்கள் முன்னிலையில் தண்டனை என்ற பெயரில் மிக மோசமாக நடத்தி அந்த அவமானம் தாங்காமல் வீட்டில் அல்லது விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் உண்டு.     ஆசிரியர்கள்     இப்படிப்பட்ட 
தண்டனைகளை  மாணவர்களுக்கு கொடுக்கும் முன் தங்கள் வீட்டில் இருக்கும் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களை இது போன்று தான் தண்டனை கொடுப்போமா? என்று ஒரு வினாடி இரக்கத்தோடு சிந்தித்திருந்தால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுமா? இந்த விஷயத்தை பொறுத்த வரை இன்னும் நம் பள்ளிகளும், ஆசிரியர்களும் இன்னும் பாடம் கற்று கொள்ள தான் வேண்டியதாய் உள்ளது.