Thursday 4 January 2018

மொபைல் போனில் வரும் மோசடி அழைப்புகள் - எச்சரிக்கை பதிவு



மொபைல் போனில் வரும் மோசடி அழைப்புகள் குறித்த எச்சரிக்கை பதிவு இது, முன்பெல்லாம் உங்கள் மொபைல் எண்ணுக்கு குலுக்கல் முறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பெற தேர்ந்தெடுக்கபட்டுள்ளதாக கூறி எஸ்எம்எஸ் வரும், அந்த பெருந்தொகையை பெற வேண்டுமென்றால் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை தர வேண்டும் என்பார்கள், ஏமாந்து போய்  வங்கி கணக்கு விவரங்களை தந்தாலோ அல்லது பெருந்தொகையை பெற வேண்டுமென்றால் ஒரு சிறு தொகையை அவர்கள் வங்கிக்கணக்கில் உங்களை டெபாசிட் செய்ய சொல்வார்கள், அவர்கள் சொல்வதை நம்பி டெபாசிட் செய்தால் உங்கள் பணம் மொத்தமும் சுருட்டி விட்டு மாயமாகி  விடுவார்கள். இதெல்லாம் பழசு இப்போது புதிது புதிதாக ஏமாற்ற கிளம்பி இருக்கிறார்கள், அவற்றில் இரண்டு மொபைல் மோசடி  கால்களின் ஒலிப்பதிவை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன், இது போன்ற மொபைல் அழைப்புகள் உங்களுக்கு வந்தால் எச்சரிக்கையாய் இருங்கள்.           

ஏ டி எம் கார்டு விவரங்களை கேட்டு வரும் மோசடி போன்கால் ஒலிப்பதிவு

உங்கள் மொபைலில்  நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின்  மேலாளர் பேசுவது போல் பேசி டெபிட் கார்ட் லாக் ஆகிவிட்டதாகவோ அல்லது காலாவதி தேதி முடிந்து விட்டதாகவும் கூறி கார்டை மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால் டெபிட் கார்ட் விவரங்களை கூறுங்கள் என்று யாரவது கேட்டால் உஷாராய் இருங்கள், இவர்களிடம் உங்கள்  டெபிட் கார்ட் விவரங்களை தந்தால் உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் சேமித்து வைத்துள்ள தொகையை மொத்தமாக சுருட்டி விடுவார்கள். (ஆதார் கார்டு விவரங்களை கேட்டு அழைப்பு வந்தாலும், உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபி எண்களை கேட்டு அழைப்பு வந்தாலும் கொடுக்க வேண்டாம்)



தகடு தகடு -  பக்தி எந்திரம் விற்கும் மோசடி கும்பல் 
நம் மக்களுக்கு இருக்கும் பக்தி உணர்வை பயன்படுத்தி மோசடி செய்யும் இந்த கும்பலிடம் ஏமாற வேண்டாம். உங்கள் மொபைல் எண் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி எட்டாயிரம் மதிப்புள்ள பூஜை எந்திரங்கள், பொருட்களை ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு தருவதாக சொல்லி போனில் ஏமாற்ற முயற்சிக்கும் பெண்ணின் உரையாடல், உங்கள் பெயர், முகவரி,எல்லாவற்றையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு கொரியரில் பார்சல் அனுப்புவதாக கூறுவார்கள், பார்சல் கொண்டு வரும் கொரியர் டெலிவரி நபரிடம் பணத்தை கொடுத்து பார்சலை வாங்கி கொள்ளும்படி கூறுவார்கள், ஏமாந்து பணத்தை கட்டி பார்சலை வாங்கினால் பார்சலில் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் இருக்கும்.   


இது போன்ற மோசடிகளில் சிக்கி பணத்தை ஏமாந்து விட்டால் காவல் துறையில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்யலாம், ஆனால் இப்படி மோசடி செய்யும் நபர்கள் பொய்யான முகவரியை கொடுத்து தான் மொபைல் எண் (சிம் கார்டு) வாங்கி இருப்பார்கள், உங்களுக்கு அழைப்பு வந்த மொபைல் எண்ணின் முகவரியை கண்டுபிடித்து சென்றாலும் அது போலியாய் இருக்கும், ஆகவே இந்த மொபைலில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.    
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்